Saturday, January 10, 2015

எப்படி சொல்லித்தர வேண்டும் தேவாரம்?

"அம்மா பார்வதி!, தண்ணி கொண்டாந்து வை. வித்யா வந்துட்டாப்பாரு!."என்ற குரல் கேட்கும்.

நான் காலணிகளைக்கழட்டும் போதே என்னிடம் வித்யா! " - 8 மணி வகுப்புக்கு சரியா 7.50க்கு வந்து இறங்கிடுறியேமா !. நல்லது!!".என்பார்.

இப்படித்தான் தினமும் எனக்கு வரவேற்பு இருக்கும் என் திருமுறை ஆசிரியர்- பெரும்பாண நம்பி திரு.மா.கோடிலிங்கம் அவர்கள் இல்லத்தில்.


நானாக தேவாரம், வள்ளலார் பாடல்கள் எனப்படிக்கத்தொடங்கி,யார் சொல்லித்தருவார்கள் எனத்தேடிக்கொண்டிருந்த சமயம்!- என் அத்தை மகன் திரு.சேகர் அவர்கள் எனக்கு, கோடிலிங்கம் அய்யாவை அறிமுகம் செய்து வைத்தார்.


என்னிடமுள்ள பல திருமுறை புத்தகங்கள் இவர் தந்தவை. மிக சுத்தமான பராமரிக்கப்படும் அவர் இல்லத்தில், சின்ன சின்ன விஷயத்தில் கூட நேர்த்தியான பாங்கு மிளிரும்.

பல நேரங்களில், என் கணிணி சார் தொழில் நுட்பத்துறையில் உள்ள என் வேலையிடத்தில், என்ன நடக்கிறதென்று கதை சொல்லுவேன். அலுவலக சூழல், வீட்டுச்சூழல் கதைகளுக்கு மத்தியில் பாடம் ஆரம்பிக்கும்.

முதல் முறை செய்யுளைப்பதம் பிரித்து வாசிப்பார்.பென்சிலால் எழுதிக்கொள்வேன்.
பிறகு அழகாய் அடி அடியாய் பொருள் சொல்லுவார். 

எங்கள் நேர்பார்வையில் ரிஷபாரூடர் காலண்டர் இருக்கும்.எந்த சூழலில் ஒரு பாடலை அருளினார்கள் என்பதையும் விளக்குவார்.

மனதில் சட்டெனப்பதியும்!. அடுத்த வகுப்பில் புத்தகத்தைப்பார்க்காமல் பாடுவேன்.

மிகக்கடினமான வேலைப்பளுவிலும், இவர் சொல்லித்தந்த திருப்புகழ் என்னை, திருவான்மியூரிலிருந்து OMR ரோடில் உள்ள சத்யம் அலுவலகம் வரை நிம்மதியாய் கொண்டுச்சேர்க்கும்.


வேலை அதிகம் என செல்லாமல் இருந்தால்,தொலைப்பேசியில்  சனிக்கிழமை வாயேன் என்பார்.

ஒரு முறை சொல்லித்தந்த பாடலில், நாமாக அதிகப்படி சங்கதிகளைக்கூட்டிப்
பாடினாலும், அந்த சங்கதிகளையும் ரசிப்பார். ஒவ்வொரு முறையும், நெய்யும் பாலும் எனத்தொடங்கும் சுந்தரர் தேவாரத்தை இந்தோளம் ராகத்தில் பாடி, இருவரும் சேர்ந்தே ரசிப்போம்.

இந்த வயதிலும் 60 க்கும் மேற்பட்டோருக்கு கற்றுத்தருகிறார். பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யாவிடம் மிகுந்த அபிமானம் இவருக்கு.

எனக்கு இவரிடம் மிகப்பிடித்த விஷயம்.- திருமுறை, வள்ளலார் பாடல்கள், சித்தர் பாடல்கள் என பலவற்றிலும், இவரது ஆழ்ந்த ஞானம்;இவர் மாணவர்களிடம் காட்டும் அளவு கடந்த பரிவு.

" சார். எனக்கு இந்த தேவாரம் சொல்லித்தாங்க!" என்று உரிமையாக இவரிடம் கேட்க முடியும். எதைக்கேட்டாலும் அவர் அறியாதது இல்லை.

இன்றைய புகழ் பெற்ற கர்னாடக இசைக்கலைஞர்களில் பலர் திருமுறை பயில வருகிறார்கள்.

ஒவ்வொரு முறை நான் வேலைக்காக வெளி நாடு செல்லும் போதும், இவரிடம் ஆசி பெற வருவேன்.

கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து எனக்கு விபூதி, குங்குமம் தருவார்கள்; இடையே வித்யா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என்பார்.

என் வீட்டில் நடந்த எங்கள் நிச்சயதார்த்தத்தில், மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழிலிருந்து தொடுக்கும்  கடவுள் எனத்தொட்ங்கும் வருகைப்பருவப்பாடலை, நான் சபைக்கு வரும் நேரம் எங்களை வாழ்த்திப்பாடினார்,

எல்லாரிடமும் வித்யா எங்கள் வீட்டுப்பொண்ணு என்பார்.அந்த அன்பை சொற்களைத்தாண்டி, பல முறை மனதார உணர்ந்திருக்கிறேன்.

உத்யோகம் ஸ்தீரீகளுக்கும் லட்சணம் தான். நல்லா மேல வரணும்; வேலையை விடாதே என அறிவுரை சொல்வார்.

இந்த முறை சிங்கப்பூரிலிருந்து போகும்போது வெகு நாட்கள் கழித்து அவர் வீட்டுக்குப்போனேன். அன்பாக உரையாடி, சாப்பிட வைத்து பை நிறைய புத்தகங்களும், மனம் நிறைய வாழ்த்துக்களோடும், வழி அனுப்பினார்.

தாய் தந்தை, குரு, மற்ற உறவுகள், நண்பர்கள் என யார் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான்.
அந்த வகையில் என் குருவாய் வந்த கோடிலிங்கம் சார் எனக்கு ஒரு வரம். அவர் நல்ல மன, உடல் நலத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்!.