Thursday, February 12, 2015

செடியாய வல்வினைகள் தீர்ப்பாய்!

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 
                                                                                 (அப்பர் தேவாரம் 6.61.2)

இறைவனின் பெருமையைப் பாடுகின்ற தேவாரப்பதிகங்களில்,சாதாரண மக்களுக்குக்கான இறைவழிபாடு குறித்த 

அறிவுரைகளையும் இலைமறைக்காயாக அங்கங்கே புகுத்தியிருக்கிறார் அப்பர் பெருமான்.

1.எப்போது வழிபட வேண்டும்? 

வழிபாட்டுக்கு மிக உகந்த நேரமாக சொல்லப்படுவது, அதிகாலைப்பொழுது.

நாம் அதிகமாய் அறிந்த திருப்பாவையும், திருவெம்பாவையும், வைகறைப்பொழுதில் எழுந்து, இறைவனை எண்ணி கசிந்துருகி வழிபட வலியுறுத்துகின்றன.


இப்போதெல்லாம்,தினமும் 
சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் குறைந்து வருகிறார்கள்.
பெரும்பாலானோர்க்கு, ஒரு பக்கம் வேலை பளு; மற்றவை நாமாக வரவழைத்துக்கொள்ளும், எண்ண சிதறல்கள் (இரவில் நெடு நேரம் கைப்பேசி, கணிணி என)- அதனால் நேரமாக தூங்க முடிவதில்லை.

சின்னப்பிள்ளைகள் கூட சொல்கின்றன- பள்ளி நாட்களில் ஒரு நேரத்திலும், விடுமுறையில்,வேறு நேரத்திலும், எழுகிறோம் என.


 ஒப்பிட்டுக்காண்க:.
மலர்ந்த மலர்த்தூவி மாமனத்தைக்கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும்-கலந்திருந்து
கண்ணீர் அரும்பக்கசியவர்க்குக் காண்பெளியன்
செண்ணீர் சடைக்கரந்ததே!
(திருவிரட்டை மணிமாலை- கபில தேவர்)

விடிவதுமே திரு நீறு அணிந்து வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்கிறார் அப்பர்.
கபில தேவரும், புலர்ந்தும் புலராத பொழுதில் வழிபட வேண்டும் என்கிறார்.

அதிகாலையில் கோயிலிலுக்கு சென்று, வழிபடும் போது, மனம் மிக எளிதாக, இறைவழிபாட்டில் ஒன்றும்.

எண்ணிலடங்கா பல சமய இலக்கியங்கள் 
அதிகாலையில் இறைவனை வழிபட வேண்டும் என்பதைச் சொல்லி, அப்படி வழிபட்டால்இறைவனின் திருவருள் கிட்டும் என்ற பயனையும் சொல்கின்றன.

2.என்ன எடுத்துச்செல்ல வேண்டும்?
இறைவன் மிக எளிய பொருட்களை சமர்ப்பித்தாலும் அவற்றை அன்போடு ஏற்றுக்கொள்கிறார்.

கோயிலுக்கு செல்லும் போது அன்று பூத்த அழகிய மலர்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் பல தேவாரங்களில் சொல்கிறார் அப்பர்.

(காண்க: திருவான்மியூர் அப்பர் தேவாரம்)
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் 
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள் 
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் 
வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே.

(விண்ட=மலர்ந்த; பறைந்திடும்- மறைந்திடும்)



மலர்கள் பிரார்த்தனைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 

பாண்டிச்சேரி அன்னையை வேண்டுவோர், தம் வீடுகளில் மலர்களால் அவர் படத்தின் முன்னே அலங்கரித்து வழிபடுவதைக்காணலாம்.

மலர்களில் எத்தனைஆயிரம் ஆயிரம் வகைகள்!- தாமரை, அல்லி, அரளி, மல்லிகை, முல்லை,...... என. 

எத்தனை வகைகள், எத்தனை எத்தனை அமைப்புகள், வண்ணங்கள்!
http://enpadhivu.blogspot.sg/2014/11/blog-post.html

ஒரு சங்கப்புலவர் பாடிய  நூறு பூக்களின் பெயர்களை சமீபத்தில் கூட சினிமாவில் பார்த்ததுதான் நினைவுக்கு வருகிறது.

நாகலிங்கப்பூ- இதை பார்த்திருக்கிறீர்களா?

அழகாய் சர்ப்பக்குடையுடன், உள்ளே சிவலிங்கமுமாக.!!!


                                              (Courtesy: Nilal.com for the picture)
ஆம்-ஒவ்வொரு பூவுக்குள்ளும் ஒரு அதிசயம் இருக்கிறது.

பூப்பூத்ததை யார் பார்த்தது; பூக்கள் பூக்கும் தருணம் யாரும் பார்த்ததில்லையே என்று
அன்றாடம்  நம் காதில் விழும் பல திரைப் பாடல்கள், பூக்கள் கவிதைகளின் கருப்பொருளாய் இருப்பதையும் காட்டுகின்றன.

உண்மையில் பூக்களில் பஞ்ச பூதங்களின் அம்சம் இருக்கிறது. அவற்றின் மணமும், தோற்றமும்,
மலர்ச்சியும், சொல்லில் அடங்காத அதன் பண்பும், அவற்றை, இறைவனுடன் தொடர்புக்கொள்ளும் கருவியாக்குகின்றன.
இதனால் தான் பூஜைகளில் பூக்கள் முக்கியமாக இருக்கின்றன.

"மலர்ந்த மலர்த்தூவி மாமனத்தைக்கூப்பி":  கையில் உள்ள மலர்கள் மலர்ந்தும், நம் மனம் இறைவனை நோக்கிக்குவிந்தும் இருக்க வேண்டும் என்கிறார் கபில தேவர்!

3. நம் பிரார்த்தனை என்னவாக இருக்க வேண்டும்?

கார் வாங்க பணம் வேண்டும், வீடு வாங்க வேண்டும், பதவி உயர்வு வேண்டும், ...- இப்படியா?

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் 
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் 
    பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும் .....- இப்படியா?இப்படிக்கேட்போர் நம்மில் எத்தனை பேர்?

மாணிக்க வாசகர் சொல்வார்- வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ என.


பிறவிக்குக்காரணமான வினைகள் தீர வேண்டும் என்பது தான் சரியான வேண்டுதல்.! 

திருக்குறள் உள்பட பல நூல்கள் பிறவிப்பிணியைப்பற்றிப்பேசுகின்றன.

இந்த பதிவின் தொடக்கத்தில் உள்ள, திருகன்றாப்பூர் தேவாரத்தில்,செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய்: 
(செடி-துன்பம்).
துன்பத்தை உடைய/உண்டாக்குகின்ற
 வல்வினைகளைத்தீர்ப்பாய் என்று கேட்கிறார் அப்பர் பெருமான் .

ஒப்பிட்டுக்காண்க:

குலசேகர ஆழ்வாரின் பாசுரம்

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியானே வேங்கடவா நின்கோயிலின்  வாசல் 
அடியாரும் வானவரு மரம்பையரும் 
கிடந்தியங்கும் 
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !

செடியாய = செடியைப்போல. 
செடி வெட்டினால் திரும்ப வேரூன்றுவதைப்போல பிறவி வரக்காரணமான வல்வினைகள், திரும்ப திரும்ப முளைக்கின்றன.
அத்தகைய வல்வினைகளைத்தீர்க்கும் திருமால் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

செடியாய என்று ஆழ்வாரும், செடியுடைய என்று அப்பர் பெருமானும், சொல்லுகிற வல்வினை நோய் தீரவேண்டும்;செல்கதிக்கு காட்ட வேண்டும் என்றும் நம் வேண்டுதல் இருக்க வேண்டும்.

இப்படி வேண்டுவோரின் நெஞ்சினுள்ளே இறைவனைக்காணலாம் என்கிறார் அப்பர் பெருமான்.

நடுதறி- கன்றினைக்கட்ட பயன்படும் குச்சி;

சைவ பெண் ஒருத்தி, திருமணமான பின்னர் அவள் கணவன் வீட்டில் இருப்போர், அவளை சிவ பூஜை செய்ய விடாமல் தடுக்க அவள், கன்றினைக்கட்டியிருந்த தறியில் சிவன் இருப்பதாய் எண்ணி வேண்டினாள்; அவளுக்கு இறைவன் காட்சி தந்தார்.

இந்தச் செய்தி அறிந்த அப்பர்- திருக்கன்றாப்பூர் இறைவனைக்குறித்து பதிகம் பாடினார்.

பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் கன்றாபூர் நடுதறி என்று சிவபெருமானைக்குறிக்கிறது.

திருக்கன்றாப்பூர் தலத்தைப்பற்றி மேலும் படிக்க:



5 comments:

krishnaveni said...

Super vidya, proud of you!

gayathri said...

Super Vidya! Really proud of you.

Krithika said...

Vidhya...really I dont have words to say how happy i am reading your blog...idhu mattum illama pazhaiya bloggalaiyum padichen....great work...by doing this, you are happy and you are spreading that to whoever reads ...superb explanations...keep writing..superb photos kooda

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2015/07/blog-post_14.html

Hari said...

Madam u will get sivagathi definitely.